உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர்
Posted: 01/07/2006 - 13:15
•  அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு, பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும்.
உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும்.
1956 ஆம் ஆண்டு ஆனி மாதம் சிங்கள அரசின் இனவெறிக்கொள்கையை எதிர்த்து தந்தை செல்வா உண்ணாநோன்பை ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் முன்னால் ஆரம்பித்தார். ஆனால் அக்காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சிங்களத்தலமைகள் ஏளனம் செயதார்களே தவிர அதை உணர்ந்து கொள்ளவில்லை. அதன்பின்பு எத்தனை எத்தனையோ அகிம்சை போர்கள் எதற்கும் செவிமடுக்காத பேரினவாத அரசுமீது இறுதியில் தமிழர் தொடுத்ததுதான் ஆயுதப்போர். அப்போர் பல வடிவங்கள், பரிணாமங்களுக்கூடாக இன்று ஒரு இறுதிநிலையை அடைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதல்முதலாக 1980 களின் நடுப்பகுதியில் அகிம்சை போரில் எமது தேசியத்தலைவர் குதித்தார். இந்திய அரசினால் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களை மீளஒப்படைக்கக்கோரி தமிழீழ தேசியத்தலைவரால் இந்தியாவில் சாகும்வரை உண்ணாநோன்பு மேற்கொள்ளப்பட்டது. அதாவது ஒரு சர்வதேச நாட்டிற்கு எதிராக சர்வதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அகிம்சைப்போர் இதுவாகும். இதில் ஒரு சிறப்பம்சம் என்ன என்றால் விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் ஆயுதப்போரையும் அகிம்சைபோரையும் முதலில் ஆரம்பித்து வைத்தவர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் தான்.
1987 களில் தமிழ் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்த என வந்த இந்திய இராணுவம் எமது உரிமைகளை ஏறி மிதித்த போது மீண்டும் ஒரு அக்கினிப்போர் ஆரம்பமாகியது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் திலீபன் சாகும்வரை நீரும் அருந்தாது உண்ணாநோன்பை ஆரம்பித்தார். 12 நாட்கள் நடந்த அக்கினிப்போரில் தமிழ் மக்களின் விடிவுக்காக மெல்ல மெல்ல தன் உயிரை விட்டான் அந்த மாவீரன். 1932 இல் மகாத்மா காந்தியினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாநோன்பின் பின்பு ஜனநாயகம், அகிம்சை என தம்பட்டம் அடித்த இந்தியாவின் முகத்திரை உலக அரங்கில் கிழிக்கப்பட்டது.

1988 இல் அன்னை பூபதியும் தமிழீழப்பகுதிகளில் அமைதி வேண்டி உண்ணாநோன்பு என்னும் ஆகுதியில் இறங்கினார். பாரதம் மறுபடியும் போரையே தமிழ் மக்கள் மீது திணிக்க முயன்றது அன்னையும் உயிர்விட்டார். அதாவது ஆயுதப்போரும், அகிம்சைபோரும் பின்னிப்பிணைந்தது தான் எமது விடுதலைப்போர். இவை எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு பரிமாணங்கள் என்றால் மிகையாகாது.


தற்போது எமது விடுதலைப்போர் ஒரு உன்னத கட்டத்தில் உள்ளது அதாவது சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் எமது போராட்டத்தை மழுங்கடிக்க எதிரி உலக நாடுகளையே எமக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகிறான். அதன் வெளிப்பாடுதான் சமாதான காலத்தில் எம்மீது திணிக்கப்பட்ட தடைகள் அழுத்தங்கள். இத்தடைகளை பயன்படுத்தி சிங்கள அரசு தமிழர் தாயகப்பகுதியில் மிருகத்தனமான படுகொலைகளை நிகழ்த்தி, அதன் மூலம் போராட்டத்தை மழுங்கடிக்கவும் இனப்படுகொலையை அரங்கேற்றவும் முனைகின்றது.
இவற்றை முறியடித்து எமது தேசத்தின் துயரை உலகிற்கு சொல்ல பேரணிகள், ஒண்றுகூடல்கள், எதிர்ப்புமனுக்கள் என புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் சர்வதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை போரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தான் திரு. தயாஇடைக்காடார்.
மீண்டும் எமது மக்களின் உரிமைகளுக்காக உண்ணாநோன்பு என்னும் உயரிய ஆயுதம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. திரு. தயா இடைக்காடார் அவர்களால் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் உண்ணாவிரத போர் தமிழ் மக்களின் உரிமைகள் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும் வரை உலகெங்கும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் என்பது மட்டும் தெளிவு.
தயா இடைக்காடார் பிரிட்டனின் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் கரோ பகுதியின் நாரசபை உறுப்பினர். இவர் பிரிட்டனில் தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சியின் பிரதிநிதியுமாவார். சிங்கள அரசினாலும் அதற்கு துணைபோகும் ஒரு சில மேற்குலக நாடுகளினாலும் சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் பொய்யான பரப்புரைகளை முறியடிக்கவும், சிங்கள அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் பிரிட்டன் அரசிடம் பின்வரும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆனி மாதம் 2 ஆம் நாள் 101 மணிநேர உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
• தாயகத்தில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த ஆவன செய்யவேண்டும். • இலங்கையின் வடக்கு கிழக்கு மக்;கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு கௌரவமான சமாதான தீர்வு எட்டப்பட வேண்டும். • பிரித்தானியா உடனடியாக மத்தியஸ்தம் வகித்து பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்.
1947 இல் தமிழ் மக்களையும் அவர்களின் உரிமைகளையும் சிங்கள அரசிடம் தாரைவார்த்து கொடுத்து விட்டு வந்த பிரிட்டனின் பாராளுமன்றத்திற்கு முன்பு தான் 59 வருடங்கள் சிங்களத்தின் அடக்குமுறையிலும் அதன் அரைவாசிப்பகுதி காலம் கொடுமையான அவசரகாலதடை சட்டத்தினாலும் நசுக்கப்பட்ட தமிழ் மக்களை அங்கிகரிக்க வேண்டிய அகிம்சைப்போர் ஆரம்பித்தது.
திரு. தயா இடைக்காடர் அவர்களின் இப்போராட்டத்தின் ஆரம்பநிகழ்வில் லண்டன் உள்ளூராட்சி மன்றங்களில் அண்மையில் தெரிவாகியிருந்த அணைத்து தமிழ் உறுப்பினர்களும், பெருமளவு மக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினார்கள். தாயகத்திலிருந்து வந்திருந்த இலங்கைப் பாரளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்போராட்டத்தை வலுவடையச் செய்வதற்காக லண்டனின் பிரதான வீதிகளில், இலங்கை அரசினால் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைவெறியாட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் இளைய தமிழ்சமுதாயத்தினால் விநியோகிக்கப்பட்டதுடன். இப்போராட்டமானது பெருமளவு வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்ததையும் இங்கு குறிப்பிடலாம்.
நான்கு நாட்கள் நிகழ்ந்த இந்த உண்ணாவிரத்ப்போராட்டத்தில் பிரிட்டன் தொழில்கட்சியின் ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான றொபேட் ஈவன்ஸ் அவர்களும் தன்னை சிலமணிநேரம் இணைத்துகொண்டார். உலகெங்கும் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவுக்குரல்கள் எழுந்ததுடன், மக்கள் சர்வமதப்பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார்கள்.
ஆனி மாதம் 6 ஆம் நாள் மாலை 5 மணிக்கு உண்ணாநோன்பு ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் ஆதரவுடன் நிறைவு பெற்றது. இக்காலப்பகுதியில் 5 இலட்சம் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது மக்கள்படும் துயரங்கள் விளக்கப்பட்டது.
இருபது இளைஞர்கள் சிவப்பு நிற சாயங்களை தங்கள் உடைகளில் பூசிய வண்ணம் பிணங்களைப் போல பாராளுமன்ற வாசலை நோக்கிய நடைபாதையில் படுத்திருந்து ஸ்ரீலங்காவின் தமிழர் பிரதேசத்தில் தினமும் நிகளும் அப்பாவி மக்களின் கொலைகளை உருவகப்படுத்தியிருந்தனர். இன்நிகழ்வு சர்வதேச சமூகமக்களின் கவனத்தையும் அதிகளவில் கவர்ந்திருந்தது.
இன்நிகழ்வு சிங்கள அரசின் பொய் பரப்புரைகளின் முடிவின் ஆரம்பமாகும் என்பதை உணர்த்தும் வகையில் உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக பிரானஸ் நாட்டில் ஆனி மாதம் 19 ஆம் நாள் ஆரம்பமாகிய 37 நாட்கள் தொடர் உண்ணாநோன்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்திற்கு அண்மையில் உள்ள உலக சமாதான நினைவு மண்டபத்திற்கு முன்பாக நடைபெறும் இன்நிகழ்வில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
ஆரம்ப நிகழ்வில் ஈகைச்சுடரினை லெப். சின்னவீரரின் தாயாரும், மேஜர் செல்வராஜாவின் சகோதரரும் ஏற்றிவைக்க பிரஞ்சு நாட்டின் தேசியை கொடியை திரு. ஆலன் ஆனந்தனும், தமிழீழ தேசியக்கொடியை சர்வதேசப்பரப்புரை பொறுப்பாளர் திரு. து. மேத்தா அவர்களும் ஏற்றி வைத்தார்கள். பேராசிரியர் யுலியா அவர்களின் ஆரம்ப உரையுடன் ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
பிரான்ஸ் பெண்கள் அமைப்பினரின் இரத்ததானம், கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இங்கு முக்கிய நிகழ்வுகள். பிரான்ஸ் நாட்டின் புலம்பெயர் தமிழ் மக்களின் இளைய சமுதாயம் தாயகத்தில் எமது மக்கள் படும் துயரங்களை துண்டுப்பிரசுரம், பதாதைகள் மற்றும் பரப்புரைகள் மூலம் பிரஞ்சு மற்றும் சர்வதேச மக்களுக்கு எடுத்துவிளக்கும் காட்சி எமது விடுதலைப்போரில் இளையசந்ததியின் பங்கு தீர்க்கமானது என்பதை உலகிற்கும், எதிரிக்கும் பறைசாற்றியுள்ளது.
நேற்று பிரிட்டன் இன்று பிரான்ஸ் நாளை கனடா என எமது போராட்டம் உலகம் எங்கும் தொடரும். எமது உரிமைகள், எமது தேசம், எமது மக்கள், எமது மொழி, எமது கலாச்சாரம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்படும்வரை. சர்வதேசத்தால் எம்மக்களின் மீதும் புலிகளின் மீதும் கொண்டுவரப்பட்ட தடைகள் அகலும் வரை. சிங்கள தேசத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேசம் கட்டுப்படுத்தும் வரை நாம் போராடுவோம் என்பதே இதன் மூலம் உலகிற்கு நாம் சொல்லும் செய்தி.
இரண்டாம் உலகப்போரின் பின்பு புலம்பெயர்ந்த யுதமக்களின் ஆதரவும் உழைப்பும், பொருளாதார தொழில்நுட்ப உதவிகளும் தான் இன்று உலகில் ஒரு வல்லமை மிக்க நாடாக இஸ்ரேலை உயர்த்தியுள்ளது. கிட்லரின் இன அழிப்பில் இருந்து தப்பிக்க அகதிகளாக உலக நாடுகளிற்கு ஓடிய யுதமக்களில் 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி அல்பேட் ஐயன்ரீனும் (யுடடிநசவ நுiளெவநin) ஒருவர். இவர் 1939 இல் அப்போதைய அமெரிக்கா அதிபர் ருசவெல்ட் (குசயமெடin சுழழளநஎநடவ) இற்கு அணுசக்தியின் முக்கியத்துவத்தையும் அதன் இராணுவப்பயன்பாட்டையும் விளக்கியிருந்தார். அத்துடன் இவரின் அணு சக்தி கோட்பாட்டாலும், எனைய விஞ்ஞானிகளுடன் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாலும் உருவானது தான் அணுக்குண்டு. இக்குண்டு தான் இரண்டாம் உலகப்போரின் போதும் அதன் பின்பும் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.
எனவே தற்போது சர்வதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றுகூடல்கள், பேரணிகள், உண்ணாநோன்புகள் என்பன தமிழீழ தாயக மக்களிற்கு மிகப்பெரும் தென்பாகவும் சிங்கள தேசத்திற்கு மிகுந்த அதிர்ச்சியையும்; கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அகிம்சை போராட்டங்கள் தொடர்ந்தும் உலகில் முன்னெடுக்கப்படுமென்பதுடன் எமது தேசத்தின் பொருளாதாரத்தையும் அறிவியல் தொழில் நுட்பத்தையும் பெருக்கவேண்டிய கடற்பாடும் புலம்பெயர்ந்த தமிழர் கைகளிலேயே உள்ளது.



நாம் சர்வதேச நாடுகளில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழீழத்தில் எத்தனையோ அப்பாவி மக்களின், பிஞ்சுக்குழந்தைகளின், தேசப்பற்றாளர்களின், ஊடகவியலாளர்களின், புத்தியீவிகளின் உயிர்களை காப்பாற்றும். தமிழீழ பிரதேசங்களில் இருந்து சிங்களப்படைகளை வெளியேற்றவேண்டிய பலம் புலிகளிடம் உண்டு ஆனால் அதே தமிழீழத்தை சர்வதேசத்தில் ஒரு அங்கிகரிக்கப்பட்ட நாடாக மாற்ற வேண்டிய கடப்பாடு புலம் பெயர் தமிழ் மக்கள் கைகளிலேயே உள்ளது என்பது வரலாற்று உண்மை.
- பிரபாகரன்
|